Showing posts with label கவிதைகள் சொல்லவா.... Show all posts
Showing posts with label கவிதைகள் சொல்லவா.... Show all posts

Wednesday, August 29, 2012







காற்றில்
சிலிர்த்தெழுந்த
நிலத்தின்
மேற்பரப்பில்
சில்லிட்டமர்ந்தது
மழைத்துளியொன்று

தலையசைத்தபடி
உற்சாகமாகியது
நிழலடர்ந்த
தெருவோர மரங்கள்..


-நன்றி,

 நட்புடன் சௌம்யா..




Tuesday, August 28, 2012

மழையுதிரும் இவ்விரவினில்...



எல்லோரும் 
குடைபிடித்ததொரு
தருணத்தில் 
உன் நினைவோடு 
நடக்கத் துவங்குகிறேன்..

தூரத்தே கேட்கும்
அவ்விடியின் சப்தம்
உன் குரலொட்டி
ரீங்கரித்து
சப்தங்கள் 
சலனப்படுத்துவதை
உணர்த்தியது..

உன்னைத் தெளிந்த நாளில்
உன் மீதங்களேதுமில்லாமல்
விலக்கப்பட்டு விட்டதாக
நினைத்ததொரு பொழுதினில்
உள்ளிருந்து வெளி எட்டிப் பார்த்தது
மீதமாக நின்ற இக் காதல்..

வேர்களின் நுனியை 
காண்பதறியாத 
அத்தனை ஆழமாய் 
என்னுள் படர்ந்துவிட்ட உன்னை
களைத்தெறிய வழியேதுமுண்டோ
என எண்ணித் தவிக்கிறேன்..

உள்ளம் அழுகையிலும்
இதழோரம் குறுநகையூட்டும்
இம்மழையின் துளியில் 
உன் மீதங்களை 
வரைந்தனுப்புகிறேன்
வேறெவளேனும்
பிழைத்துக் கொள்ளட்டுமென்று..

மழையுதிரும் இவ்விரவில்
அருகில் யாருமில்லையெனினும்
மழை துடைத்தெறிகிறது
வழிந்தோடும் கண்ணீரை..


- நன்றி,
   நட்புடன் சௌம்யா..



Monday, August 27, 2012



இத்
தேனீர்
கோப்பை 
நிரப்பிக் 
கொண்டிருக்கிறது
நம் ஊடல் 
தருணங்களை..
அருகமர்ந்து 
ஆறுதலாகிறேன் 
உன் நினைவின் 
மிச்சங்களுடன்..!



Wednesday, February 15, 2012





நிழலை 
நம்பும் மனம்
நிஜத்தை 
மறுக்கிறது..

கண் விழிக்கும் 
போதெல்லாம்
கரைந்து
போனதுன் கனவு..

மீண்டும்
இமை மூடிக் கொள்கிறேன்
நிஜத்தை கொல்கிறேன்..





என்
ஆசைகளை 
ஆடையாக்கிக்
கொண்ட 
என் கனவுகளின்
நாயகன் நீ..

என் 
விழி இமைக்கும்
பொழுதினில்
மனதினுள் நுழைந்து
மதி மறக்கச் செய்யும்
குறும்பு நீ..

வம்புகள் செய்தே
என் நேரங்களை
களவாடும் 
திருடன் நீ..







எதிர்பார்ப்புகளை
விட்டொழித்தால் 
ஏமாற்றம் தடைபடும்
அதீதமான
எதிர்பார்ப்புகள் தான்
மிதமிஞ்சிய ஏமாற்றத்தை  
தருகிறதாம்..

ம்ம்ம்ம்..
உண்மை தான்
உன் மீதான என்
எதிர் பார்ப்புகளை
விட்டுவிட்டேனென்று
சொல்லியே
ஏமாற்றிக் கொள்கிறேன்
என்னை நானே
ஒவ்வொரு நொடியிலும்..!



Thursday, October 27, 2011

"காதலும் காதல் நிமித்தமும்.. " 2



நீ 
கடந்து 
செல்லும் 
போது 
சாலையோர 
மரங்கள்
எல்லாம்
சோலையோர 
மரங்களாகி 
விடுகின்றன...



என்னிதயத்தை
தகர்ப்பதற்கென்றே
இறைவன்
படைத்த
அதி அற்புதமான
ஆயுதம்
உன்
சிரிப்பு...



Saturday, October 8, 2011

" காதலும் காதல் நிமித்தமும்... " 1

நீ
முத்தமிட்டு
மூட்டும் 
தீயில் தான்
குளிர் 
காய்கின்றன்றன
" என்னிதழ்கள்... "


வரலாற்று 
காலங்களை
கிறிஸ்து பிறப்பதற்கு முன்
கிறிஸ்து பிறந்த பின்
என்று
பிரித்திருப்பது 
போல
என் 
வாழ்க்கை 
காலத்தை
காதல் பிறப்பதற்கு முன்
காதல் பிறந்த பின்
என்று
பிரித்திருக்கிறேன்...




Tuesday, September 20, 2011

" தொலைக்கப்பட்ட தன்னியல்பு "





நியாயமா..
நியாயமாவென்று
கேள்விகளால் 
வேள்விகள் 
தொடக்கம் என்னுள்.. 

விடையறியும் 
ஆவல் நீள்கிறது.. 
ஆனால் 
எங்கோ சென்று
ஒளிந்துக் கொண்டு 
வேதனை தருகிறது... 

வேதனைகளை 
வெட்டிச் சாய்க்க 
புதிதாக சிரிக்கத் 
துவங்கி இருக்கிறது
மனம்.. 
இல்லை இல்லை
நடிக்கத் துவங்கி இருக்கிறது..
தன்னியல்பு நிலையை 
தொலைத்து விட்டு..

எங்கும் 
இருள் சூழ்ந்த நிலையில் 
வெளிச்சத்தின் 
கோடுகள் 
விரலிடுக்கில் 
நுழைவது போல் 
எங்கிருந்தோ வரும் 
மழைச் சாரலைக் கூட 
தொட்டுப் பார்க்க 
துணிவில்லை இப்போது...

உரசிச் செல்லும் 
தென்றலை தழுவும் 
தைரியமில்லை இப்போது.. 

காலை நேர 
பனித்துளியையும், 
மாலை நேர 
மஞ்சள் வானத்தையும் - அதன் 
நிர்மலமான நீல நிறத்தையும் 
ரசித்துப் பார்க்க 
மனமில்லை இப்போது...


Monday, September 19, 2011




காதலை 
பற்றி மட்டும் 
இனி எழுத கூடாது
என முடிவெடுத்த
நிமிடம்..

விரல் வழியில்
கசியும் வார்த்தைகள்
வேலை நிறுத்தம்
செய்தன..

நிரந்தர மற்ற நிலையில்
நிறுத்தம் செய்யும்
வார்த்தைகளை
பற்றிய சிந்தனையை
எண்ணித் தவிக்கையில்

மீண்டும் 
பற்றிக் கொண்டது 
எண்ணத்தில் - காதல்

எனை 
பற்றிக் கொன்றது..


Wednesday, September 14, 2011

நீ என் " மழையானவன் .. !"



உன்
மின்னல் சிரிப்பில்
நெட்டித் தள்ளி
என்னுயிர்
சிதறச் செய்யும்
என் ப்ரிய
மழை துளி நீ..

நகர்ந்து செல்லும்
கார்மேகத்தின்
சாரலாகி
பூந்தூறலாகி
பெருமழையாகிறாய்
உன் காதலில்..

அடை மழையாய் 
சில நேரம்..
ஆரவாரமற்று 
சில நேரம்..
ஆர்பாட்டங்களோடு
பல நேரமுமென
கனமழையாகிறாய் 
என் இதயம் 
நனைத்து 
வாசம் வீசுகிறாய்..

மழை தேடி
தவித்திருக்கும்
நிலம் போல
உனை தேடி 
காத்திருக்கிறேன்
பல நேரங்களில்
நான்..

மழை நின்ற பின்பான
மண் வாசம்..
நாசி துளைத்து
உள் நுழைந்து
இதயம் வருடி
மூளையை எட்டும்..!

முதுகுத் தண்டில்
மின்னல் வெட்டி..
மின்சாரம் பாய்ந்து
மென் இதயம் கிழித்து
குருதி புசித்து
என் உள்ளம் எட்டும்
உன் காதல் வாசம்..!

இப்போதாவது
புரிந்து கொள்.. 

நீ என் 
" மழையானவன் "


Tuesday, August 23, 2011

" எனது முதல் கவிதை... "





மழை கால மேகமே 
என் நெஞ்சில் 
தூறலாய் வந்து
வெள்ளமானாயே..

குளிர் கால தென்றலே
என் இதயத்தில் 
காற்றாய் நுழைந்து 
புயலானாயே..

மார்கழி மாத பனியே
காலைக் கதிரவனால் 
உருகினாலும்
நிறைந்த குளிராய் 
என் மனதில் நீ..!


( "கவிதைகளோடு கரம் பிடிக்க தொடங்கிய நாளில் என் முதல் கிறுக்கல்...." )



Saturday, August 20, 2011

" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... "




அம்மா..
அமைதியின் 
போர்வைக்குள் ஒளிரும் 
அன்பின் விலாசம் நீ..

எவ்வளவோ 
எழுதியிருக்கிறேன்
ஆனால்
இன்று வரை
எழுதியதில்லை 
உன்னைப் பற்றி
எதுவும்..

உன்னில் 
கருவாகி உருவாகி
உனதுதிரத்தால் 
உயிர் சுமந்து
இப்படி 
பிரிந்து நிற்பேன்
என்றறிந்திருந்தால்
பிறவாமலே 
இருந்திருப்பேன்..

நான் 
துயில் துறந்து 
விழிக்கும் 
ஒவ்வொரு நாளிலும்
என் முன் நிற்பாயே..
இப்போது 
உனை 
பாராமல் இருக்கிறேன்
நிதமும்..

சிறுவயதின் அழுகையில்
ஏனென்று கேளாமலே
அரவணைத்து
எனதழுகை நிறுத்துவாயே..
இப்போது 
மௌனமாக 
மனதிற்குள் அழுகிறேன் 
உன் அரவணைக்கும் 
கைகளை தேடுகிறேன்..
.
மழலையில்
வார்த்தைகள் 
புரியாத போதும்
நீ மட்டும் புரிந்ததாய்
தலை சரித்து 
சிரித்துக் கொஞ்சுவாயே..
இப்போது 
பேசுவதற்கு கூட 
வார்த்தகள் தேடுகிறேன்.. 
.
தோளில் சாய்த்து 
நான் கண்ணுறங்க 
நீ விழித்திருப்பாயே..
இப்போது நாட்கள் கடந்து
தூக்கம் மறந்து நிற்கிறேன்..

என் பசியறிந்து
பசியாற்றிய காலங்கள்
நீ பசிமறந்து நின்ற 
நினைவுகளை
நிறுத்துகிறது நெஞ்சில்..
இப்போது
என் பசி மந்தித்து
வெகு நாட்களாக
இருந்தும் 
இல்லாதிருக்கிறேன்..

தவறு செய்தால் 
தண்டிப்பாயே..
உன்னை 
நிராகரித்துச் சென்ற எனக்கு
என்ன தண்டனை
கொடுக்கப் போகிறாய் 
அம்மா..??

உன்னை 
விட்டுச் சென்ற நாளில் 
நீ எவ்வாறெல்லாம் 
பதறினாயோ...

எனக்கு
இப்போது புரிகிறதம்மா
நிராகரிப்பின் 
வலியும் வேதனையும்..

மீண்டும்
என் தலை கோதி 
என்னை அரவணைப்பாயா..
உன் மடியில் குழந்தையாவேனா 
அம்மா..??


நன்றி,
நட்புடன் சௌம்யா...

Thursday, August 18, 2011

" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... " 2




உன்னை
ஒருமுறை தான்
திரும்பிப் பார்த்தேன்..
பிறகுதான்
அடிக்கடி 
விரும்பிப் பார்த்தேன்..

உன் 
" காதல் " 
தான் வேண்டும் 
என கேட்டு அடம் பிடிக்கும்
" வளர்ந்த குழந்தை " 
நீ..

உன்னுடன் 
வார்த்தையாடும் போது
எதேச்சையாக 
காதல் சொல்லி விடுவேனோ..??
என்று தான் 
தவிர்த்துக் கொண்டே 
இருந்தேன்
என் வார்த்தைகளை..

கைபேசியில் 
உன் குறுஞ்செய்திகளை 
அழிக்கும் 
ஒவ்வொரு முறையும்
அது அழித்துக் கொண்டு இருந்தது
என் தயக்கத்தை..

நம் 
இருவருக்கும்
மட்டுமான
கைபேசி உரையாடலின்
சில தருணங்களின் 
இடையில் எழும்
சிறு அமைதியில்
உன் மனதோடு 
உரையாடியது
என் காதல்..

முதன் முறையாக
உன் உரையாடல் 
இல்லாத அன்று தான்
உணர்ந்தேன் 
தொலைபேசி 
எத்தனை " அன்னியம்" 
என்று..  

இப்படி
" நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக
எனக்குள்ளே
காதல் "

" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... " 1




நீ
பார்க்கும் 
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறக்கிறேன் 
நான்..

ஒரே தவறுதான்
விரும்பியே செய்கிறேன்..
நீ 
திரும்பித் திரும்பிப்
பார்க்கையில்
உன்னை 
விரும்பி விரும்பியே
களவாடுகிறது 
என் கண்கள்...

ஒரு முறை 
உன் விழியினை சந்திக்க 
ஓராயிரம் முறை 
யுத்தம் செய்கின்றன
என் இமைகள்..

உன்னோடு 
ஒரு வார்த்தை பேச
நூறு முறை
ஒத்திகை பார்க்கின்றன
என் வார்த்தைகள்..

போகிற போக்கில்
சிந்தி விட்டுச் செல்கிறாய் 
மெல்லியதாய் 
ஒரு புன்னகை...
அது 
என் இதயம் வரை
ஸ்பரிசித்து விட்டு
செல்கிறது...

இப்படி
" நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக 
எனக்குள்ளே 
காதல்.. "

Sunday, June 12, 2011

" நான்... நீ... ஆதலால்... காதல் "


எத்தனை முறை 
அனைத்தாலும் 
புதிதாகத்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறையும் 
உனதனைப்பு...






நீ முத்தமிடும்
நளினம் கண்டே
விலகிப் போனதடா
என் வெட்கம்...

என்னை 
கொல்வதற்கென்றே
ஒரு பார்வையும்..
என்னை 
கொள்ளையடிப்பதற்கென்றே
ஒரு சிரிப்பையும்
வைத்திருக்கிறாய் நீ...



நீ 
அருகில் உறங்கும்
நேரங்களில் எல்லாம்
என் உறக்கம் தொலைத்தே
விழித்திருக்கிறேன் 
உன் உறக்கம் ரசிக்க...
எங்கேதான் 
கற்றுக்கொண்டாயோ..?
அழகாய் உறங்குவதற்கு..!!


உன் தலை கோதும் போது
என் கைவிரல் இடுக்கில்
அகப்பட்ட ஒற்றை முடியை..
நீ அறியாமல் 
பதுக்கிக் கொண்டது 
என் புத்தம் புது டைரி..!

நீ கடித்தெறிந்த
உன் கைவிரல் 
நகத்துண்டுகள்
பிறை நிலவினை விட
அழகானது...

என்
பார்வை தொடரும் 
இடமெல்லாம் 
நின்று
கள்ளமாய் சிரித்து 
என் உள்ளம் 
தொடுகிறாயடா
என் கள்ளச்சிரிப்பழகா...!



என்னுள் 
தட்பவெப்ப மாற்றம் 
நிகழ்த்துகிறாய் நீ..
உச்சி வெய்யிலிலும்
என் உள்ளம் 
குளிர்விக்கிறது
உன் அருகாமை..
என் செல்ல ஸ்நேகிதா
அறியாமல் தான் 
கேட்கிறேன்
என்ன மந்திரம் 
செய்கிறாயடா நீ...???

என் செல்லக் குறும்புக்காரா..
உன்னை நினைத்தே 
வைத்துக்கொண்டதாலோ 
என்னவோ
என் கைவிரல்களில் 
அழகாய் சிவந்திருக்கிறது
மருதாணி...

நமக்குள் 
பேசிக்கொண்டு 
இருக்கையில்
திடீரென 
முத்தமிட்டுவிட்டு
ஏதுமறியாது
சிரித்துப் 
பேசிவிடுகிறாய் நீ..
அதில் 
சிக்கலாவதென்னவோ
என் மனம் தான்..


"இங்கே வா.. 
என்னை ஒரு 
புகைப்படம் எடு"
என்கிறாய்..
அது என்ன ..
என் விழிகளை விட
அவ்வளவு அழகாக 
படம் பிடித்து 
விடுமா உன்னை..?


உன் காதல் பெரிதா..?
என் காதல் பெரிதா..?
என கேட்டாய்..
இறுமாப்புடன்
சொல்லத் தொடங்கினேன் 
கவிதையில்
காதலை..!




இப்போது 
நீ சொல் என்றேன்...
புன்னகைத்துவிட்டு
முத்தங்களால் 
சொல்லத் தொடங்கினாய் நீ..
தோல்வியோடு 
தலை குனிந்ததடா 
என் கவிதைகள்..



Wednesday, May 11, 2011

" அழகான இம்சையடா நீ "


உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென 
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
_______________________________


என்னை 
உன் கண்களில்
நனைத்து 
காதல்  செய்கிறாய்...
"சலவைக்காரன் போல 
நீ என்ன காதல் காரனா..?"
________________________________

எப்போதும் 
உன் அருகிலேயே 
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
ஆண் ஈர்ப்பு விசையா...?
___________________________

உன் 
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை 
எப்படியடா...?
______________________________
உன்னை 
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில் 
சிரிக்கிறேன் நான்..
என்ன 
மந்திரம் செய்தாயடா...?
________________________________







நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத் 
தொடங்கி விடுகிறேன்
தனியாக-
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
______________________________

உன் 
கைக்குட்டையில்
எப்படித்தான் 
மடித்து 
வைத்தாயோ...?
என் உயிரையும் 
சேர்த்து...
_______________________________
 
உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________________
என் 
எண்ணக் கருவில்
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
காதல் விதைத்த
உன்னையே 
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!
____________________________
 

Tuesday, May 10, 2011

"பெய்யெனப் பெய்யும் மழை"

இது 
மழைக் காலம்
காதல் 
மழைக் காலம்..
இதில்
நீ
நான்
நம்மோடு 
நம்
  "மழை"


நீயும் நனைகிறாய்
நானும் நனைகிறேன்
நம்மோடு சிலிர்த்து
தானும் நனைகிறது
"மழை"

சாரலோ தூறலோ
தான் மட்டும் இன்றி
சுகமாய் சுமந்து வருகிறது
உன் நினைவுகளையும்
"மழை"


மழை பொழிந்த ஒரு நாளில்..
முழுதும் நனைந்து வந்த
என்னை
துவட்டி விட்டுக்கொண்டே
திட்டினாய்
"பைத்தியக்காரி" என்று..
நானும் கோபமாக 
"போடா காதல்காரா"
என்றேன்...
உடனே
முத்தத்தால் 
துவட்ட ஆரம்பித்தாய்
என்னை...

தேகம் தீண்டும் 
காற்றில் எல்லாம்
உன் வாசம் நுகர்கிறேன்..
சிலிர்த்து பெய்யும்
மழையில் 
நனையும் போதெல்லாம்
சந்தேகம் கொள்கிறேன்..
சில்லென்று என்
தேகம் தொடுவது
மழை துளியா..?
உன்
விரல் நுனியா..?

"அடைமழை"
விடாது பெய்கிறது
உன் காதல்...
நனைந்து நிற்கிறேன்
நான்..

Thursday, April 28, 2011


 காற்றும்
இசையாகும்..
அழகானதொரு 
வாசிப்பில்..
வார்த்தைகளும்
கவிதையாகும்
அழகானதொரு 
நேசிப்பில்...
உலகமும் 
என் வசமாகும்
உன் அழகான 
புன்சிரிப்பில்...!

Wednesday, April 13, 2011

கைபேசியில் பதிவானது " காதல் "


கை பேசியில் 
பேசியதென்னவோ
நீதான் ...
ஆனால் 
பதிவானதென்னவோ
காதலாகி
போனது...


கை பேசி அழைப்பை
துண்டித்த மறு 
நொடியில்
மீண்டும் அழைப்பு
வருமோ..
என காத்திருக்க
தொடங்கிவிடுகிறது
மனது..

நீ அனுப்பும் குருஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய்
உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி
சண்டைகளில்
விட்டுக் கொடுப்பது
நீயாகவே
இருந்திருக்கிறாய்..

அதன் சமாதான
வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது
உனதன்பு...

நீ அழைத்து
பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் 
விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது
என் கைபேசி...

இப்போதெல்லாம்
நீ அழைத்து பேசும் 
நிமிடங்களுக்காய்
காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது 
கை பேசியும்...