Thursday, October 27, 2011

"காதலும் காதல் நிமித்தமும்.. " 2



நீ 
கடந்து 
செல்லும் 
போது 
சாலையோர 
மரங்கள்
எல்லாம்
சோலையோர 
மரங்களாகி 
விடுகின்றன...



என்னிதயத்தை
தகர்ப்பதற்கென்றே
இறைவன்
படைத்த
அதி அற்புதமான
ஆயுதம்
உன்
சிரிப்பு...



Saturday, October 8, 2011

" காதலும் காதல் நிமித்தமும்... " 1

நீ
முத்தமிட்டு
மூட்டும் 
தீயில் தான்
குளிர் 
காய்கின்றன்றன
" என்னிதழ்கள்... "


வரலாற்று 
காலங்களை
கிறிஸ்து பிறப்பதற்கு முன்
கிறிஸ்து பிறந்த பின்
என்று
பிரித்திருப்பது 
போல
என் 
வாழ்க்கை 
காலத்தை
காதல் பிறப்பதற்கு முன்
காதல் பிறந்த பின்
என்று
பிரித்திருக்கிறேன்...




Monday, October 3, 2011

" சொப்பனச் சுவடுகள்.. "


.

அதீதம் இணைய இதழில் வெளியான எனது கிறுக்கல்...

இமைகள்
ஸ்பரிசிக்கத் தொடங்கிய 
அம் மென் தருணங்களின் 
இடைவெளியினில்
மௌனமொழியின் 
ஆர்பரிப்பினில்
கரைகின்ற நிமிடங்களை
கனவலைகள்
இழுத்துச் செல்கின்றன
ஆழ்நிலை உறக்கத்திற்குள்..

செல்லரிக்கப்பட்ட 
நிஜங்களை 
தாங்கி நிற்கும் நினைவுகள்
ஒன்றன்பின் ஒன்றாக
வரிசைப்படுத்தப் படுகிறன்றன..

வசியமாக்கப்பட்டதொரு
மோன வெளியில்
எண்ணக் கசிவுகளின்
வார்த்தை வடிவங்கள்
குரலுயர்த்தி ஓலமிடத் தொடங்கின.. 

திரும்பிய வினாடியில்
நுழையும் திசையறியாது
புழுதியின் பரப்பினில்
நிற்கமாட்டாமல் 
ஓடிக்கொண்டிருக்கிறது
கனவின் கால்கள்..

பதப்படுத்தப்பட்ட 
நிலையில் 
வரிசையாக
அடுக்கப்பட்டிருக்கிறது
குளிர்பதனப் பெட்டியில்
கற்பனைக் குவியல்..

அழிக்கப்பட்டதோ..
அடக்கிவைக்கப்பட்டதோ..
அடைய வேண்டியதோ.. 
விருப்பங்கள் நிறைவேற்றம் 
கொள்ளும் நிலையில் 
இமைகள் பிரிந்த 
விழிகளில்
துயில் துறக்கப்பட்டு
துரத்தப் படுகிறது
சொப்பனச் சுவடுகள்..

இயல்புகள் 
தொலைக்கப்பட்ட நிலையில்
தொக்கி நிற்கிறது 
ஆங்கோர்
கனாக் காலம்...


                                                                                                                 

Tuesday, September 20, 2011

" தொலைக்கப்பட்ட தன்னியல்பு "





நியாயமா..
நியாயமாவென்று
கேள்விகளால் 
வேள்விகள் 
தொடக்கம் என்னுள்.. 

விடையறியும் 
ஆவல் நீள்கிறது.. 
ஆனால் 
எங்கோ சென்று
ஒளிந்துக் கொண்டு 
வேதனை தருகிறது... 

வேதனைகளை 
வெட்டிச் சாய்க்க 
புதிதாக சிரிக்கத் 
துவங்கி இருக்கிறது
மனம்.. 
இல்லை இல்லை
நடிக்கத் துவங்கி இருக்கிறது..
தன்னியல்பு நிலையை 
தொலைத்து விட்டு..

எங்கும் 
இருள் சூழ்ந்த நிலையில் 
வெளிச்சத்தின் 
கோடுகள் 
விரலிடுக்கில் 
நுழைவது போல் 
எங்கிருந்தோ வரும் 
மழைச் சாரலைக் கூட 
தொட்டுப் பார்க்க 
துணிவில்லை இப்போது...

உரசிச் செல்லும் 
தென்றலை தழுவும் 
தைரியமில்லை இப்போது.. 

காலை நேர 
பனித்துளியையும், 
மாலை நேர 
மஞ்சள் வானத்தையும் - அதன் 
நிர்மலமான நீல நிறத்தையும் 
ரசித்துப் பார்க்க 
மனமில்லை இப்போது...


" கருணைக் கொலை.. "








சேர்த்திருப்பாயா.. நீ ??
சேர வேண்டிய 
அனைத்தையும்
சேர்த்திருப்பாயா...??

கடவுளிடம் 
கருனை கேள்
நீ இதை செய்
அதற்காக 
நான் அதை 
ஈடு செய்கிறேன் - என்று
வியாபாரம் செய்யாதே..

கடன் கொண்டு
சுமை ஏற்காதே..
முற்பிறவியின்
தீரா சுமைக்காக தானே
இம் மனிதப் பிறவி..

இப்பிறவியிலும்
தொடரும் 
உன்னை
இறைவனாலவது
செய்ய முடியுமா

ஒரு
"கருணைக் கொலை..!"



Monday, September 19, 2011

" கொள் அல்லது கொல் "





எனை ஆட்கொண்ட இறைவா
உன் சம்மதத்தில் தானே
அனைத்தும் ..

மடியும் உயிரும்
உருகும் மெழுகாகி
சிந்தை சிதைந்து நிற்கிறது
நிந்தனை செய்யும் எண்ணங்களால்..

மன்னிக்கவியலா மனிதர்கள்
நிறைந்த இவ்வுலகில்
வேண்டாமெனக்கு 
பிறவியொன்றொன்று..

தயை செய்து - இப்போதே
என்னை கொள்
அல்லது கொல்..





காதலை 
பற்றி மட்டும் 
இனி எழுத கூடாது
என முடிவெடுத்த
நிமிடம்..

விரல் வழியில்
கசியும் வார்த்தைகள்
வேலை நிறுத்தம்
செய்தன..

நிரந்தர மற்ற நிலையில்
நிறுத்தம் செய்யும்
வார்த்தைகளை
பற்றிய சிந்தனையை
எண்ணித் தவிக்கையில்

மீண்டும் 
பற்றிக் கொண்டது 
எண்ணத்தில் - காதல்

எனை 
பற்றிக் கொன்றது..


Wednesday, September 14, 2011

நீ என் " மழையானவன் .. !"



உன்
மின்னல் சிரிப்பில்
நெட்டித் தள்ளி
என்னுயிர்
சிதறச் செய்யும்
என் ப்ரிய
மழை துளி நீ..

நகர்ந்து செல்லும்
கார்மேகத்தின்
சாரலாகி
பூந்தூறலாகி
பெருமழையாகிறாய்
உன் காதலில்..

அடை மழையாய் 
சில நேரம்..
ஆரவாரமற்று 
சில நேரம்..
ஆர்பாட்டங்களோடு
பல நேரமுமென
கனமழையாகிறாய் 
என் இதயம் 
நனைத்து 
வாசம் வீசுகிறாய்..

மழை தேடி
தவித்திருக்கும்
நிலம் போல
உனை தேடி 
காத்திருக்கிறேன்
பல நேரங்களில்
நான்..

மழை நின்ற பின்பான
மண் வாசம்..
நாசி துளைத்து
உள் நுழைந்து
இதயம் வருடி
மூளையை எட்டும்..!

முதுகுத் தண்டில்
மின்னல் வெட்டி..
மின்சாரம் பாய்ந்து
மென் இதயம் கிழித்து
குருதி புசித்து
என் உள்ளம் எட்டும்
உன் காதல் வாசம்..!

இப்போதாவது
புரிந்து கொள்.. 

நீ என் 
" மழையானவன் "


Tuesday, August 23, 2011

" எனது முதல் கவிதை... "





மழை கால மேகமே 
என் நெஞ்சில் 
தூறலாய் வந்து
வெள்ளமானாயே..

குளிர் கால தென்றலே
என் இதயத்தில் 
காற்றாய் நுழைந்து 
புயலானாயே..

மார்கழி மாத பனியே
காலைக் கதிரவனால் 
உருகினாலும்
நிறைந்த குளிராய் 
என் மனதில் நீ..!


( "கவிதைகளோடு கரம் பிடிக்க தொடங்கிய நாளில் என் முதல் கிறுக்கல்...." )



Saturday, August 20, 2011

" பிரியத்தோடு நீ.. பிரிவோடு நான்... "




அம்மா..
அமைதியின் 
போர்வைக்குள் ஒளிரும் 
அன்பின் விலாசம் நீ..

எவ்வளவோ 
எழுதியிருக்கிறேன்
ஆனால்
இன்று வரை
எழுதியதில்லை 
உன்னைப் பற்றி
எதுவும்..

உன்னில் 
கருவாகி உருவாகி
உனதுதிரத்தால் 
உயிர் சுமந்து
இப்படி 
பிரிந்து நிற்பேன்
என்றறிந்திருந்தால்
பிறவாமலே 
இருந்திருப்பேன்..

நான் 
துயில் துறந்து 
விழிக்கும் 
ஒவ்வொரு நாளிலும்
என் முன் நிற்பாயே..
இப்போது 
உனை 
பாராமல் இருக்கிறேன்
நிதமும்..

சிறுவயதின் அழுகையில்
ஏனென்று கேளாமலே
அரவணைத்து
எனதழுகை நிறுத்துவாயே..
இப்போது 
மௌனமாக 
மனதிற்குள் அழுகிறேன் 
உன் அரவணைக்கும் 
கைகளை தேடுகிறேன்..
.
மழலையில்
வார்த்தைகள் 
புரியாத போதும்
நீ மட்டும் புரிந்ததாய்
தலை சரித்து 
சிரித்துக் கொஞ்சுவாயே..
இப்போது 
பேசுவதற்கு கூட 
வார்த்தகள் தேடுகிறேன்.. 
.
தோளில் சாய்த்து 
நான் கண்ணுறங்க 
நீ விழித்திருப்பாயே..
இப்போது நாட்கள் கடந்து
தூக்கம் மறந்து நிற்கிறேன்..

என் பசியறிந்து
பசியாற்றிய காலங்கள்
நீ பசிமறந்து நின்ற 
நினைவுகளை
நிறுத்துகிறது நெஞ்சில்..
இப்போது
என் பசி மந்தித்து
வெகு நாட்களாக
இருந்தும் 
இல்லாதிருக்கிறேன்..

தவறு செய்தால் 
தண்டிப்பாயே..
உன்னை 
நிராகரித்துச் சென்ற எனக்கு
என்ன தண்டனை
கொடுக்கப் போகிறாய் 
அம்மா..??

உன்னை 
விட்டுச் சென்ற நாளில் 
நீ எவ்வாறெல்லாம் 
பதறினாயோ...

எனக்கு
இப்போது புரிகிறதம்மா
நிராகரிப்பின் 
வலியும் வேதனையும்..

மீண்டும்
என் தலை கோதி 
என்னை அரவணைப்பாயா..
உன் மடியில் குழந்தையாவேனா 
அம்மா..??


நன்றி,
நட்புடன் சௌம்யா...

Thursday, August 18, 2011

" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... " 2




உன்னை
ஒருமுறை தான்
திரும்பிப் பார்த்தேன்..
பிறகுதான்
அடிக்கடி 
விரும்பிப் பார்த்தேன்..

உன் 
" காதல் " 
தான் வேண்டும் 
என கேட்டு அடம் பிடிக்கும்
" வளர்ந்த குழந்தை " 
நீ..

உன்னுடன் 
வார்த்தையாடும் போது
எதேச்சையாக 
காதல் சொல்லி விடுவேனோ..??
என்று தான் 
தவிர்த்துக் கொண்டே 
இருந்தேன்
என் வார்த்தைகளை..

கைபேசியில் 
உன் குறுஞ்செய்திகளை 
அழிக்கும் 
ஒவ்வொரு முறையும்
அது அழித்துக் கொண்டு இருந்தது
என் தயக்கத்தை..

நம் 
இருவருக்கும்
மட்டுமான
கைபேசி உரையாடலின்
சில தருணங்களின் 
இடையில் எழும்
சிறு அமைதியில்
உன் மனதோடு 
உரையாடியது
என் காதல்..

முதன் முறையாக
உன் உரையாடல் 
இல்லாத அன்று தான்
உணர்ந்தேன் 
தொலைபேசி 
எத்தனை " அன்னியம்" 
என்று..  

இப்படி
" நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக
எனக்குள்ளே
காதல் "

" நிறைய நீயும் .. கொஞ்சம் நானும்... " 1




நீ
பார்க்கும் 
ஒவ்வொரு முறையும்
புதிதாய் பிறக்கிறேன் 
நான்..

ஒரே தவறுதான்
விரும்பியே செய்கிறேன்..
நீ 
திரும்பித் திரும்பிப்
பார்க்கையில்
உன்னை 
விரும்பி விரும்பியே
களவாடுகிறது 
என் கண்கள்...

ஒரு முறை 
உன் விழியினை சந்திக்க 
ஓராயிரம் முறை 
யுத்தம் செய்கின்றன
என் இமைகள்..

உன்னோடு 
ஒரு வார்த்தை பேச
நூறு முறை
ஒத்திகை பார்க்கின்றன
என் வார்த்தைகள்..

போகிற போக்கில்
சிந்தி விட்டுச் செல்கிறாய் 
மெல்லியதாய் 
ஒரு புன்னகை...
அது 
என் இதயம் வரை
ஸ்பரிசித்து விட்டு
செல்கிறது...

இப்படி
" நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக 
எனக்குள்ளே 
காதல்.. "

தூரிகையின் வழியில் நான்..
















" யாரோ ஒருத்தியின் காதல் குறிப்பு..." - 2...


அபூர்வமாய் கிடைப்பதில் ஆர்வம் மிகுவது சகஜம் தானே... 
ஆம் இது அபூர்வமாய் வாய்த்ததொரு காதல்..
நான் ஆசையுடன் பயணிக்கிறேன் மீண்டும் அந்த காதல் மழை காலத்தில்...

MAY 6...
என் மனதில் கருத்தரித்த உன் நினைவுகளை எல்லாம் குழந்தையாக பெற்றெடுக்கிறதடா என் வார்த்தைகள்..

கூண்டுப் பறவையின் கதவுகளை திறந்து சிதறடிக்கும் கனவுகளில் சிறகடிக்கச் செய்தவன் நீ..
நட்பு காதலாகாது என்றேன்
காதல் இல்லாத நட்பும் நட்பாகாது என்றாய் நீ..
நண்பர்களுக்குள் காதல் வந்தால் நட்பு கருகி விடும் என்றேன் நான்..?!

" காதலித்தால் நட்பு சாகுமா..??? 
அடி என் முட்டாள் பெண்ணே...
 நான் இறக்கும் வரை நட்போடு இருக்கத்தான் உன்னை காதலிக்கிறேன் உணர்ந்து கொள்.. " என்றாய் நீ..

" யாரிடம் வேண்டுமானாலும் நட்பு கொள்ளலாம் ஆனால் உன்னிடம் மட்டும் தானடி என்னால் காதல் கொள்ள முடியும்" என்றாய் நீ...

நீ வார்த்தைகளால் வாதாடி இருந்தால் விட்டிருக்க மாட்டேன் நான்,  இப்படி காதலால் வாதிட்டு விட்டாயே..!
என்ன செய்வேன் நான்..?!

MAY 18..
இதுவரை நீ என்னிடம் பேசியதிலேயே அழகான வார்த்தை எது தெரியுமா..? 
" உன் காதலை கொஞ்சமாவாவது எனக்கு கொடு "  என்றாயே இது தான்..

உன்னைக் கண்டு நான் உருகிய நாளில் காதலே என் ஸ்வாசமாகி போனதடா..
உன் அன்பை பொழிந்த மழையில் காதல் பிடிக்காத என்னையும் உயிர் நனைய வைத்தாயடா..

எல்லா நேரங்களிலும் நீ என்னுடன் பேசியதில்லை... 
ஆனால் நீ பேசாத நேரங்களில் எல்லாம் உன் நினைவுகள் ஏதேனும் பேசிக்கொண்டிருக்கும் என் மனதோடு....

எல்லாவற்றை பற்றியும் ஏதேனும் பேசிவிடுவாய் இயல்பான ரசனையுடன்..!
எந்த ஒரு விஷயமும் உன்னை நினைவு படுத்தும் சக்தி கொண்டதாக தான் இருக்கிறது..
உன்னை மறக்கும் சக்தியை இழந்து விட்டு நிற்கிறது என்னுடன் சேர்த்து எல்லாமும்...

MAY 25...
பார்வையில் இருந்து விலகத் தொடங்கும் எல்லாவற்றிலிருத்தும் தொடங்கி விடுகிறது ஏதேனும் ஒன்று உன்னைப் பற்றி..
என்ன செய்வேனடா நான்..?

உன்னை " தென்றல் "
என்றே தான்
எண்ணியிருந்தேன்..
ஆனால்
என்னை ஆட்கொண்ட பின்னர் தான்
" புயல் "
என்பதை உணர்ந்தேனடா..!

நீ என்னை..
" டா " என சொல்லும் போதும்
" டீ " என கூப்பிடும் போதும்
" ஒன்னு குடுடீ " என கெஞ்சும் போதும்
" தங்கம் " என கொஞ்சும் போதும்
"கண்ணம்மா " என எனை திணர வைத்த போதும்
உன்னிடம் மயங்கினேனடா
மீண்டும் மீண்டும்..!
நீ இல்லாத நேரங்களில் எல்லாமும் என்னை உன் நினைவுகளாலேயே
கட்டி வைத்து வதைக்கிறாயடா..

பல வித்தைகள் கற்றிருப்பதாக கூறுவாயே..
அதில்
உன் மௌன வித்தை மட்டும் 
என் இதயத்திற்கு கற்றுக் கொடு..
கட்டுக்கடங்காமல் சதா உன் நினைவிலேயே
இருக்கிறது..
உன்னை மறக்கும் வழிதான் தெரியவில்லையடா..

JUNE 6
நனவுகளில் நிறையாமல் 
கனவுகளிலும் கலையாமல் 
என் நினைவுகளை மொத்தமாக களவாடிச் சென்ற என் நினைவுத் திருடனே...

நீயும் நானும் காதலிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்து தான் கட்டவிழ்க்கப்பட்டன என் கனவுகள்..

என் சம்மதம் கேளாமல்
என்னை அருகில் இழுத்து
சட்டென்று அளித்தாய் முத்தத்தை..
முத்தங்களால் கைது செய்து 
முத்தங்களால் என்னை கொன்ற மொத்தக் கொலைகாரனடா நீ..! 
வேண்டாம் என் நானும் 
வேணும் என் நீயும்
சண்டையிட்டுக் கொண்டும் 
முகம் திருப்பிக் கொண்டும்
அருகருகே அமர்ந்து கொண்டும்
உன் தோள் மீது சாய்ந்து கொண்டும்
பகலில் நனவாகவும் 
இரவினில் கனவாகவும்...
மொத்தத்தில் உன் நினைவுகள் அனைத்தும் என் நடு நிசியின் பசியாகிப் போனதடா....!

JUNE 27...
ஆயிரம் வேலைகள் இருந்தாலும், உன்னைப் பற்றி நினைக்கும் இதமான வேலையையும் நொடி தவறாது செய்கிறதடா பேதை மனது..
வேண்டாம் என்றாலும் விடாமல் உன் நினைவுகளிலேயே சுற்றித் திரிகிறது இந்த பைத்தியகார மனது...!!

என் கனவுகள் அனைத்தையும் நிஜமாக்கித் தந்தவன் நீ
இப்போது நிஜமான அனைத்தையும் நினைவாக்கித் தந்தவனும் நீயே தானடா..!

நான் கேட்காமலேயே அழகாய் கொடுத்தாய் உன் அன்பினை
ஆனால் அவ்வளவு கெஞ்சியும் கொஞ்சமும் தள்ளிப் போட முடியவில்லை நம் பிரிவுகளை.. 

JULY 7...
நினைக்க நினைக்க திகட்டாமல் இனித்துக் கொண்டே இருக்கிறதடா இன்னமும் நம் காதல் காலம்..

உன் காதல் எப்போதும் தாராளம்..
உன்னிடம் நான் வியந்தது ஏராளம்... 
எப்படித் தான் சாத்தியமானதோ உனக்கு மட்டும் எல்லாமும்..!!

எனக்குள் ஒளிந்திருந்த என்னை
நானே அறியாமல் வெளி கொணர்ந்து
என்னை என்னிடமே அறிமுகம் செய்து வைத்தாய்..!

என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த என்னை
என்னை மறந்து உன்னை பற்றி மட்டுமே சிந்திக்க செய்தாய்..!

என் கைபிடித்து ஏதோ ஒரு ரேகையை பார்த்து " இது தான் நான் "  என்று சொல்லி அதையே என் ஆயுளின் ரேகையாக்கினாய்..!

உன்னைக் காணாத பொழுதுகளில் எல்லாம் நகரமறுத்த நேரங்களை
உன்னை பார்த்த உடன் நில்லாமல் ஓடிவிடச் செய்தாய்..!

உன்னுடன் பேசி சிரித்த சில நாட்களுக்குள்
நீ பேசாது போகும் நிமிடங்களுக்காய் கண்ணீர் ததும்பக் கற்றுத் தந்தாய்..!

கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து பாஷைகள் தந்தாய்..!
பக்கம் வந்தே தொட்டு பேசினாய்..!
மெல்ல அருகினில் வந்து முத்தமும் தந்தாய்..!
மொத்தத்தில் என் கனவுகள் அனைத்தையும் களவாடிவிட்டாயடா...

JULY 19...
பகலெல்லாம் பதுங்கியிருக்கும் வெண்மதி
அந்தி மாலையின் அழகிய ஆரம்பத்தில் முட்டி மோதி வந்து விடுவது போல.. 
உறக்கம் நெருங்கும் நேரங்களில் எல்லாம் விழிகளில் நிறைந்து விடுகிறதடா உன் நினைவுகள்..!

நீ செல்லமாய் சீண்டும் நேரங்களில் எல்லாம்
மெல்லமாய் எட்டிப் பார்த்ததடா என் காதல்..!

" என் மிகப் பிடித்த திருப்பம் நீ...." 
உன்னை என் இதயத்தினால் ரசிக்கத் துவங்கி விட்டேன்
அதனால் தான் நீ இனிக்கிறாயடா..!

நீ புன்னகைகும் ஒவ்வொரு முறையுமே ஏதேனும் ஒன்றை தவற விட்டு இருக்கிறேன்
ஆனாலும் அதில் அதிகமாக தவறியதென்னவோ நானாக தான் இருந்திருக்கிறேன்..!

என்ன மந்திரம் தான் ஒளித்து வைத்திருந்தாயோ உன் குரலில்..??
நீ பேசும்போதெல்லாம் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல
உன் குரலுக்கு கட்டுப்பட்டு ஊமையாகிப் போனதடா என் வார்த்தைகள்..?!

என்னை ஈர்பதற்காக நீ எதுவுமே செய்யவில்லை 
எப்படி உன்னை காதலித்து தொலைத்தேனோ..? என்று யோசித்தேன்,
ஆனாலும் அதுவே தான் என்னை ஈர்த்தது.. 
உன் அழகே, அழகான உன் காதல் தான் தெரியுமா..??

எதையாவது பேசி கொண்டிருக்கும் போதே ஆரம்பித்துவிடுவாய் முத்தம் பற்றியும்..
" உனக்கு இது தவிர எதுவும் தெரியாதா டா??"  என்றால் 
"இதை விட உன்னதமான விஷயம் வேறு என்ன இருக்கு"  என்று பதில் கேள்வியும் வைத்திருப்பாய்..

உன் திமிரை கூட ரசிக்கத்தான் தோன்றியது எனக்கு.. 
" ஒரு முத்தம் குடுடீ" என்று அதிகாரமாய் கேட்ட போது..!

ஒரே ஒரு முத்தத்தினால் உன் காதல் அனைத்தையும் உணர்த்தி என்னை மூர்ச்சையாக்கி விட்டு
பின்னும் தொடங்கினாய் மறு முத்தத்தால் முதலுதவியையும்...
நீ முத்தமிட்ட நாட்கள் எல்லாம் சிவந்து கிடக்கிறதடா இன்னமும் என் நாட்குறிப்பேட்டில்..

JULY 30...
நீ செய்யும் வன்முறைகளை ரசித்துக் கொண்டே உன்னிடம் தோற்றவளடா நான்..
எபோதும் என் நினைவுகளோடு விளையாடும் தீராத விளையாட்டு பிள்ளையடா நீ..

என்ன செய்வானோ என்ற குழப்பமான பயத்தில் பரிதவித்த என் விழிகளின் பதிலாக மென்மையாக அணைத்து.. இனிக்க இனிக்க நீ அளித்த முத்தத்தில் நிறைந்திருக்கிறதடா என் நினைவுகள்..

இன்றும் நன்றாக நினைவிருக்கிறது...
முதல் நாள் சந்திப்பில் மின்னலாய் உரசிச் சென்று என் உள்ளம் துளைத்தது உன் பார்வை... 
என் இமைகள் இமைக்க மறந்ததால் 
சிந்திக்க மறுத்தது என் எண்ணங்கள்.. 
அந்தி மாலையும், அதன் பிறகான இரவும்
கொட்டிக் கிடந்தது நம்மோடு அடர்ந்த தனிமை.. 
பாஷை மறந்து மௌனங்களில் கரைந்தேன்
வார்த்தைகள் தொலைத்தேன்
ஆரம்பமானது விழிகளின் தேடல்
ஏக்கமான உணர்வுகளோடு துவங்கிவிட்டாய் நீ
துவள்கிறது எல்லாமும்
காற்றில் பரவியது வெப்பமான மூச்சுக் காற்று
எச்சில் பட ஏக்கமானது உதடுகள்
அணைத்தாலும் அணையாத தீ
தீண்டத் தீண்டத் தூண்டப்பட்டது.. 
ஆரத் தழுவிய ஆசை நிமிடங்களோடு
கரமிரண்டும் கோர்த்துக் கொண்டது காதலை
நம் தனிமையின் நிசப்தங்களில் 
உதடுகள் முணுமுணுக்கும் உச்சரிப்பில்
சிக்கித் தவித்தது உன் பெயர்..
வீசும் காற்றினில் இலைகள் பேசும் ரகசியமாய்
உன் காதில் மட்டுமே ஒலித்தது என் ரகசிய சிணுங்கல்கள்...
குளிர் தழுவும் மார்கழி போல எனை தழுவி நிற்கிறதடா உனது நினைவுகள் அனைத்தும்..!

மேல் நோக்கி விசிறப்படும் எல்லா பொருட்களும் பூமிக்கே திரும்பிவிடுவது புவி ஈர்ப்பு விசை...
விலகிச் சென்றும் விஸ்வரூபமாகும் உன் நினைவுகள் என்ன ஈர்ப்பு விசை..??

AUGUST 17...
எப்போதும் சொல்வாய் " என்னை மாதிரி யாரலையும் பேச முடியாது " என்று
ஆமாம் .. உன்னை மாதிரி யாராலும் பேசவும் முடியாது.. 
உன்னை போல இருக்கவும் முடியாது..

மழை நின்ற பின்பான மண் வாசம் என்பது 
நாசி துளைத்து
உள் நுழைந்து
இதயம் வருடி
மூளையை எட்டும்..
அது போல தான் 
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டி 
மின்சாரம் பாய்ந்து
குருதி புசித்து 
இதயம் கிழித்து
என் உள்ளம் எட்டியது உன் காதல் வாசம்..!

AUGUST 30..
என் ப்ரியமானவனே..
கொஞ்சிக் கொஞ்சியே என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றவனடா நீ..

ஒரு நிமிடத்தில் கனவுகள் கொடுத்து
மறு நிமிடத்தில் அதை அழகாக அழிக்கவும் தெரிந்த கை தேர்ந்த வித்தைகாரனடா நீ.

நீ என்னை விட்டு பிரிந்து செல்லும் தருணங்களில் எல்லாம்
எதையெல்லாமோ சொல்ல நினைத்து வார்த்தைகள் வரமறுத்து தவித்திருக்கிறேன்.. 
போட்டி போடும் என் விழிமழையின் துணையோடு..!
ஆனாலும்..
என்னால் சொல்ல இயலாததை எல்லாமும்என் இதழ்களாவது சொல்லிவிடும் என்ற நம்பிக்கையோடு தான் ஒவ்வொரு பிரிவிலும் முத்தமிட்டே அனுப்பினேன் உன்னை..

SEPTEMBER 9..
மௌனமாக இருந்த என் சில நிமிடங்களை கூட மொழிபெயர்த்தவன் நீ..
என்னுள் இருக்கும் உன்னை காண்பதற்காக காத்திருக்கின்றன என் தேடல் காலங்கள்..

உரக்கத்தில் புரண்டு படுக்கும் உனது தலை கோதுவதற்காய் காத்திருக்கின்றன என் காலை வேளைகள்..

உன் தோள் மீது என் தலை சாய்தலுக்காக தேக்கி வைத்திருக்கிறேன் என் நிமிடங்களை..

நம் ஈரைவிரல் தீண்டி நடக்கும் நேரங்களுக்காய் காத்திருக்கின்றன என் இனிமையான பொழுதுகள்..

உன்னோடு என் இதழ் உரையாடும் தருணங்களுக்காய் பதுக்கி வைத்திருக்கிறேன் என் வார்த்தைகளை..

உன் இதழின் உன்னத ஸ்பரிசத்திற்காக சேமித்து வைத்திருக்கிறேன் என் காதலை எல்லாம்.. 

உன் இதயத்தில் என் துளாவலும்
என் இதயத்தில் உன் அலாவலும் வேண்டுமடா நித்தமும்...

யாரேனும் சொல்லிக் கொடுத்தா ஸ்வாசிக்கிறோம் அதுபோல தானே அன்பும் 
" சொல்லி வருவதும் இல்லை... 
சொல்லி தருவதும் இல்லை... "
உன் மீதான அன்பும் அப்படித்தான்.. 
" நீ சொல்லி வந்ததுமில்லை.. 
நீ சொல்லி தந்ததும் இல்லை.. "
என்றேனும் உணர்ந்து கொள்வாயா என் செல்ல காதலா..??

SEPTEMBER  20...
உன்னால் மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள் என்னை எப்போதெல்லாம் அறுவை சிகிச்சை செய்தாலும்...
மறைத்து வைக்கப்பட்ட உன் நினைவுகள் மட்டுமே அத்தனைக்கும் மருந்தாகிப் போகிறதடா..

என்னை உன் நெஞ்சோடு சேர்த்தணைத்த போது 
உன்னை என் தாயாகவே உணர்ந்தேன் நான்..!

நிறைய நீயும்
கொஞ்சம் நானுமாக 
எனக்குள்ளே "காதல்" ..
இங்கு காதல் கெஞ்சியது
கொஞ்சியது..
சிணுங்கியது..
மிஞ்சியது..
வெட்கப்பட்டது.. 
ஆனால் காலத்தின் சதியோ அன்றி என் விதியோ
என் காதல் இன்றும் மிச்சப்பட்டே நிற்கிறதடா..
திரும்பிப் பார்க்குமா மற்றொரு காதல் காலம்...???

 கடற்கரையின் ஈர மணலில் 
என் பெயர் எழுதச் சொன்னாய்...
ஆனால் அப்போது கேட்கத் தோன்றவில்லை
" உன் இதயத்தில் எழுதியிருக்கிறாயா நீ..? " 
என்று..

OCTOBER 2..
"வாழ்வின் அர்த்தம்"
எப்படி யோசித்தாலும் அது 
"உனக்குள் தான் "என்றே 
முற்றுப்புள்ளி வைக்கிறது என் ஊமை மனது...
ஆம் நீயின்றி எப்படி என் வாழ்வு மட்டும் அர்த்தமுள்ளதாகும்..??

நீ என் முதல் காதல்
நீ என் முதல் முத்தம்
நீ என் உயிரின் யுத்தம்
நீ என் சுமுகமான வலி
நீ என் முடிவான தொடக்கம்
நீ என்னுள் மூண்ட தீ.. 
ஆனாலும் என்றும் விலகாத பணி..
எனக்கே எனக்கான ரகசிய வலியாய் நம் "காதல்"
மரணம் என்னை மொத்தமாய் திண்ற பின் 
என் கல்லறையின் கடைசி கல்வெட்டில் 
நான் பதியப் போகும் ரகசிய வாக்கு மூலம் நீ...!!

OCTOBER 17..
ஆயிரம் கேள்விகளோடு 
உன்னை சுற்றி
சுழன்றுக்கொண்டிருக்கிறது
என் காதல்...
ஆனால் இப்போதெல்லாம்
உன் வார்த்தைகளில் 
ஒன்று கூட எனக்கானதாய் இல்லை உன்னிடம்...

உன் பொய்கள் கூட எனக்கு பிடித்தம் தான்
சொல்வது நீயாய் இருப்பதால்..
என் கண்ணீர் கூட எனக்கு வரம் தான்
வரவழைப்பது நீயாய் இருப்பதால்..
சோகம் கூட எனக்கு சுகம் தான் 
கொடுத்தது நீயாய் இருப்பதால்..

என் உயிரானவனே...
நீ இல்லை என்றால் 
நான் இறந்து போவேன் என்றேல்லாம் சொல்ல மாட்டேனடா..
வரம் கொடு வாழ்ந்து பார்க்கிறேன்
" உன் உயிராக "
இல்லையேல் 
நினைவுகள் மட்டுமாவது கொடு
வாழ்ந்து காட்டுகிறேன்
" உன் காதலாக "

OCTOBER 31..
" கவிதை "
உன்னை எனக்கு 
அறிமுகம் செய்தத்து..
நீ எனக்கு
" காதலை " 
அறிமுகம் செய்தாய்..
எனக்காக இல்லை என்று தெரிந்திருந்தும்
பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறேன் 
உன் காதலோடு சேர்த்து
நீ அனுப்பிய அனைத்தையும்...
" நீயே கொடுத்ததால் "

என் அன்புக் காதலா...
புன்னகையின் பூந்தளிர் நீ
உன் செல்ல சிரிப்புகளோடும்
சின்ன சின்ன சில்மிஷங்களோடும்
சிதறடிக்கும் நினைவுகளோடும் தான் 
நிதமும் பயணிக்கின்றேன் நான்..

நான் சாய்ந்து கொண்ட உன் தோள்கள்
உன் இதழ் பதிந்த ஈரச் சுவடுகள்
உன் மார்புச் சூட்டில் முகம் புதைத்த தருணங்களுமாய் 
தொடர்கிறதடா எனது காலம்..
இங்கு நேரம் நிமிடம் எல்லாமும் போக்க வேண்டியவைகள் அல்ல...
" பொக்கிஷங்கள் "

நான் தேடித் தேடி சேகரித்து வைத்த என் நினைவுகளின் வழியில்
வார்த்தைகளின் வடிவினில் கண்ணாமூச்சி ஆடுகிறாய் நீ
என் எண்ணங்கள் அனைத்தையும் உன் நினைவுகளால் மட்டுமே நிரப்பி
என் வெள்ளைத் தாள்களை கவிதையாக 
மொழிபெயர்ந்தவன் நீ..
நான் கவிதையாக நினைத்து
எதையும் எழுதவில்லை..
உன்னைப் பற்றிய நினைவுகளை மட்டுமே
நிரப்புகிறேனடா..

NOVEMBER 17... 
தொடக்கத்தில் நீ யார் என்ற குழப்பம் மிகுந்திருந்தது எனக்குள்..
மெதுவாகத் தான் உணர்ந்தேன் 
நீதான் என் " காதல் தேவன் " என்று..
ஆண்களின் காதல் தேவதைகள் குறித்த சிரிப்பும் வரும் அப்போதெல்லாம்..
ஏன் காதல் என்றால் தேவதைகள் மட்டும் தான் இடம்பெறுவார்களா...???
அந்த தேவதைகளுக்கு எல்லாமும் தலைவன் நீ.. 
என் " காதல் தேவன்... "

எத்தனையோ யுகங்களாய் காத்திருந்து விட்டு
இந்த யுகத்தில் வந்து பிறந்த 
உன்னைப் பார்த்து தன்னை அழகாக்கி கொண்டதடா " காதல் "
உன் வசீகரத்தில் சற்று மயங்கித் தான் போனது என்னோடு சேர்த்து காதலும்..

உன் காதலை உணரத்தான் நான் தாமதம் செய்து விட்டதாக கூறுவாய்..
ஆனால் நீ என்னை விட்டு மெல்ல மெல்ல விலகுவதையும் நான் தாமதமாகத் தான் உணர்கிறேனடா...
உன்னை நினைத்து என்னை மறந்த அந்தாட்களில் வேதனைகள் மட்டுமே அறிமுகமானது எனக்குள்..
  ஆனாலும் தொலைந்து போனதடா என் இதயம் உனக்குள்..

நிதர்சனமான உண்மைகளை தாங்கியபடி
நினைவுகளோடு நிகழ்வுகளும் போட்டி போடுகிறது..
நிஜங்களை எரித்து உன் நினைவுகள் உருக்கப்படுக்கின்றன..
பொய்யாய் சிரிப்பதற்கும் கற்றுக்கொடுத்து விட்டாயடா இப்போது..!

NOVEMBER 29...
உன் அருகாமை தான் என் ஸ்வர்கம்..
இதை நீ உணர்ந்திருக்கிறாயோ என்னவோ..??
ஆனால் நான் உருகியிருக்கிறேன்..

காதலிலும் கண்ணீர் தந்தவன் நீ
கோபத்திலும் கண்ணீர் தந்தவன் நீ
இப்போது பிரிவிலும் கண்ணீர் தருபவன் நீ..

நீ..
என்னைத் தாங்கிய நாட்கள் 
கொஞ்சமானாலும் 
அதுவே என் வாழ்வின் பொற்காலம்
உன் மீதான அன்பினில் தினமும் கரைகிறதடா எனதுயிர்...
உயிர் பிழைத்திருந்தால் மீண்டும் சந்திக்கலாம்..

இனி ஒரு ஜென்மம் எடுப்பதானால்
எனக்கே எனக்கு மட்டுமாய் வேண்டுமடா 
உன் காதல் முழுவதும்... 
மற்றொரு பிறவியிலும்
உனக்காக நான் 
காத்திருக்கிறேன் ராஜகுமாரா..!!

( காதல் எப்போதும் அழகானது.. ஆழமானது.. ஆதலால்..
 முடிவுறாது நீளட்டும் அவளின் காதல் கனவுகளில் மட்டுமாவது அவனின் நினைவுகளோடு.. )

மென் தளிர் விட்டு 
அரும்பும் காதல்..!

விழி வரையும் கடிதங்கள்
மனத் தபால் பெட்டிக்குள் 
விழும் முன்னரே 
நிராகரிப்பு மட்டும் நிகழ்ந்து விடும்..

ஆனால் இங்கு முத்திரையிட்டு சரியாக விலாசம் பதிந்தும் ஏனோ நிகழ்ந்தது பிரிவுத்துயர்..
இதயத்திற்குள் வழியும் கண்ணீரை கண்களுக்கு அறிமுகம் செய்யாமல்
இன்னமும் காத்திருக்கிறது காதல் மட்டும் அன்போடு.. " மறுபிறவி " நோக்கி..!


நன்றி
நட்புடன் சௌம்யா...