Wednesday, November 7, 2012

இன்னும் சில விநாடிகளில்...


சற்றேரக்குறைய 
இன்னும் சில நிமிடங்களில் 
நான் செத்துப் போகலாம்..
ஒரு மிருகம் இரை திண்பதைப் போல்
வெகு வேகமாக
எனைத் திண்றுக் கொண்டிருக்கிறது 
விலா வலிக்கச் சிரிக்கும் 
அவனின் சம்பாஷனைகள்..
சுய பிரக்ஞையற்றுக் கிடக்கும் பொழுதொன்றில் 
உருவமறியா பட்சினியொன்று 
எனை உற்று நோக்கி 
பரிதாபத்தோடு சிகை தாழ்த்தும் 
அக்கணத்தின் முடிவில் 
எனக்கான புதிய வாசஸ்தலம் ஒன்று 
கண்டறியப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.. 

ஆம்.. 
இன்னும் சில வினாடிகளில்
நான் செத்து விடலாம்..

எவர் அறியக் கூடும்?? 

நெஞ்சழுத்தும் இவ்வலியோடு 
அடர் வனமொன்றில் 
குடை விரித்தாடும் 
மரக்கிளையின் முகப்பொன்றில் 
பட்டும் படாமல் அமர்ந்திருக்கும் 
அச்சிறு பறவை 
நானாகவும் இருக்கக் கூடும்...


Sunday, October 14, 2012

தேவதை கானம்...
தனக்கே
உரித்தான ஒலியில்
ஓரழகிய பாடலோடு
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
அக் கைபேசி..

அப்பாடலின்
ஒற்றை நுனியை
பற்றியவாரே
அதன் பல்லவியின்
குறுக்கிலும்
நெடுக்கிலும்
மிதக்கத் தொடங்கினேன்

அதன் சரணத்தில்
என்னுயிர் கரைந்து
சட்டென்றொரு
பறவையாகி
வானில் பறக்கிறேன்

நிலவினருகில்
இளைப்பாருகிறேன்

நட்சத்திரங்களில்
உல்லாசமாய்
ஊஞ்சலாடுகிறேன்..

அப்பாடலின்
கடைசி ஆலாபனையில்
அருகிருந்த
மேகத்திற்குள்
தவறி விழுந்தேன்

அதில்
ஒளிந்திருந்த
மழை
பூக்களை
தூவியது..

அப்பாடலின்
முடிவில்
நானொரு
தேவதையாகித்
திரும்பினேன்
என்னிடத்திற்கு..

இப்போது
எனதிறகுகள்
அதன்
வரிகளை
எழுதத் தொடங்கின
எனக்குள்..Friday, October 12, 2012

மரணாவஸ்தை கொண்ட ஆகப் பெருந்துயரென்பது...யாரென்றறியாத அவ்விருவரும்
எவர் போலவுமில்லை..
யாரிருக்க முடியும் அவர்களைப் போல..?
தெய்வாம்சப் பெண் அவள்
அவனோ ஷத்ரிய வம்சத்தவன்
அவனைப் பார்க்கும்போதெல்லாம்
உள்ளங்கையாள் வதனத்தை மூடுகிறாளெனில்
அது வெட்கமல்ல; பெருந்துயரொன்றின் கேவல்
அவளைவிட அதிதுயரம் சுமக்கிறான் அவன்.
காலம் தம் இதயத்தின்
வலதறையில் அவளை
இடதறையில் அவனை
நிரப்பிக்கொண்டு காளிங்க நர்த்தனம் ஆடுகிறது.
காலத்தைக் குற்றம் சொல்லும் பாவம்
அவர்களுக்குள்ளும் இருக்கிறது.
காலம் குற்றம் செய்ததாகினும்
தவறொன்றும் இழைக்காததாகினும்
ஏதொன்றையோ செய்து
இருவரையும் தண்டனைக்குப் பணித்து
நேசச் சிலுவை சுமக்கச் செய்திருக்கிறது.
பிறிதொரு பிறவியின் வரவேற்பறையில்
காத்துக் கொண்டிருக்கலாம் இந்நேசம்
ஒருவேளை கதறிக்கொண்டுமிருக்கலாம்..

Sunday, September 9, 2012
கண்ணீரின் 

வெப்பத்தை

தண்ணீரில் கரைக்கும்

மழையாகிப் 

போகிறேன் 

உன்னைப் பற்றி

கவிதை எழுதும் 

கணமொன்றில்...


உன் பெயரை 
சொல்லும்
துளிகளினூடே
மழையின்
மிச்சத்தோடு
மிதந்தலைகிறேன் - நான்
நிச்சயமாக
நிரப்பிக் கொண்டிருக்கும்
அவற்றுள்
ஏதேனுமோர் துளி
உன் சாயலை..!

Wednesday, August 29, 2012காற்றில்
சிலிர்த்தெழுந்த
நிலத்தின்
மேற்பரப்பில்
சில்லிட்டமர்ந்தது
மழைத்துளியொன்று

தலையசைத்தபடி
உற்சாகமாகியது
நிழலடர்ந்த
தெருவோர மரங்கள்..


-நன்றி,

 நட்புடன் சௌம்யா..
Tuesday, August 28, 2012

மழையுதிரும் இவ்விரவினில்...எல்லோரும் 
குடைபிடித்ததொரு
தருணத்தில் 
உன் நினைவோடு 
நடக்கத் துவங்குகிறேன்..

தூரத்தே கேட்கும்
அவ்விடியின் சப்தம்
உன் குரலொட்டி
ரீங்கரித்து
சப்தங்கள் 
சலனப்படுத்துவதை
உணர்த்தியது..

உன்னைத் தெளிந்த நாளில்
உன் மீதங்களேதுமில்லாமல்
விலக்கப்பட்டு விட்டதாக
நினைத்ததொரு பொழுதினில்
உள்ளிருந்து வெளி எட்டிப் பார்த்தது
மீதமாக நின்ற இக் காதல்..

வேர்களின் நுனியை 
காண்பதறியாத 
அத்தனை ஆழமாய் 
என்னுள் படர்ந்துவிட்ட உன்னை
களைத்தெறிய வழியேதுமுண்டோ
என எண்ணித் தவிக்கிறேன்..

உள்ளம் அழுகையிலும்
இதழோரம் குறுநகையூட்டும்
இம்மழையின் துளியில் 
உன் மீதங்களை 
வரைந்தனுப்புகிறேன்
வேறெவளேனும்
பிழைத்துக் கொள்ளட்டுமென்று..

மழையுதிரும் இவ்விரவில்
அருகில் யாருமில்லையெனினும்
மழை துடைத்தெறிகிறது
வழிந்தோடும் கண்ணீரை..


- நன்றி,
   நட்புடன் சௌம்யா..Monday, August 27, 2012இத்
தேனீர்
கோப்பை 
நிரப்பிக் 
கொண்டிருக்கிறது
நம் ஊடல் 
தருணங்களை..
அருகமர்ந்து 
ஆறுதலாகிறேன் 
உன் நினைவின் 
மிச்சங்களுடன்..!Wednesday, February 15, 2012

நிழலை 
நம்பும் மனம்
நிஜத்தை 
மறுக்கிறது..

கண் விழிக்கும் 
போதெல்லாம்
கரைந்து
போனதுன் கனவு..

மீண்டும்
இமை மூடிக் கொள்கிறேன்
நிஜத்தை கொல்கிறேன்..

என்
ஆசைகளை 
ஆடையாக்கிக்
கொண்ட 
என் கனவுகளின்
நாயகன் நீ..

என் 
விழி இமைக்கும்
பொழுதினில்
மனதினுள் நுழைந்து
மதி மறக்கச் செய்யும்
குறும்பு நீ..

வம்புகள் செய்தே
என் நேரங்களை
களவாடும் 
திருடன் நீ..எதிர்பார்ப்புகளை
விட்டொழித்தால் 
ஏமாற்றம் தடைபடும்
அதீதமான
எதிர்பார்ப்புகள் தான்
மிதமிஞ்சிய ஏமாற்றத்தை  
தருகிறதாம்..

ம்ம்ம்ம்..
உண்மை தான்
உன் மீதான என்
எதிர் பார்ப்புகளை
விட்டுவிட்டேனென்று
சொல்லியே
ஏமாற்றிக் கொள்கிறேன்
என்னை நானே
ஒவ்வொரு நொடியிலும்..!