Wednesday, February 15, 2012





நிழலை 
நம்பும் மனம்
நிஜத்தை 
மறுக்கிறது..

கண் விழிக்கும் 
போதெல்லாம்
கரைந்து
போனதுன் கனவு..

மீண்டும்
இமை மூடிக் கொள்கிறேன்
நிஜத்தை கொல்கிறேன்..





என்
ஆசைகளை 
ஆடையாக்கிக்
கொண்ட 
என் கனவுகளின்
நாயகன் நீ..

என் 
விழி இமைக்கும்
பொழுதினில்
மனதினுள் நுழைந்து
மதி மறக்கச் செய்யும்
குறும்பு நீ..

வம்புகள் செய்தே
என் நேரங்களை
களவாடும் 
திருடன் நீ..







எதிர்பார்ப்புகளை
விட்டொழித்தால் 
ஏமாற்றம் தடைபடும்
அதீதமான
எதிர்பார்ப்புகள் தான்
மிதமிஞ்சிய ஏமாற்றத்தை  
தருகிறதாம்..

ம்ம்ம்ம்..
உண்மை தான்
உன் மீதான என்
எதிர் பார்ப்புகளை
விட்டுவிட்டேனென்று
சொல்லியே
ஏமாற்றிக் கொள்கிறேன்
என்னை நானே
ஒவ்வொரு நொடியிலும்..!



Thursday, October 27, 2011

"காதலும் காதல் நிமித்தமும்.. " 2



நீ 
கடந்து 
செல்லும் 
போது 
சாலையோர 
மரங்கள்
எல்லாம்
சோலையோர 
மரங்களாகி 
விடுகின்றன...



என்னிதயத்தை
தகர்ப்பதற்கென்றே
இறைவன்
படைத்த
அதி அற்புதமான
ஆயுதம்
உன்
சிரிப்பு...



Saturday, October 8, 2011

" காதலும் காதல் நிமித்தமும்... " 1

நீ
முத்தமிட்டு
மூட்டும் 
தீயில் தான்
குளிர் 
காய்கின்றன்றன
" என்னிதழ்கள்... "


வரலாற்று 
காலங்களை
கிறிஸ்து பிறப்பதற்கு முன்
கிறிஸ்து பிறந்த பின்
என்று
பிரித்திருப்பது 
போல
என் 
வாழ்க்கை 
காலத்தை
காதல் பிறப்பதற்கு முன்
காதல் பிறந்த பின்
என்று
பிரித்திருக்கிறேன்...




Monday, October 3, 2011

" சொப்பனச் சுவடுகள்.. "


.

அதீதம் இணைய இதழில் வெளியான எனது கிறுக்கல்...

இமைகள்
ஸ்பரிசிக்கத் தொடங்கிய 
அம் மென் தருணங்களின் 
இடைவெளியினில்
மௌனமொழியின் 
ஆர்பரிப்பினில்
கரைகின்ற நிமிடங்களை
கனவலைகள்
இழுத்துச் செல்கின்றன
ஆழ்நிலை உறக்கத்திற்குள்..

செல்லரிக்கப்பட்ட 
நிஜங்களை 
தாங்கி நிற்கும் நினைவுகள்
ஒன்றன்பின் ஒன்றாக
வரிசைப்படுத்தப் படுகிறன்றன..

வசியமாக்கப்பட்டதொரு
மோன வெளியில்
எண்ணக் கசிவுகளின்
வார்த்தை வடிவங்கள்
குரலுயர்த்தி ஓலமிடத் தொடங்கின.. 

திரும்பிய வினாடியில்
நுழையும் திசையறியாது
புழுதியின் பரப்பினில்
நிற்கமாட்டாமல் 
ஓடிக்கொண்டிருக்கிறது
கனவின் கால்கள்..

பதப்படுத்தப்பட்ட 
நிலையில் 
வரிசையாக
அடுக்கப்பட்டிருக்கிறது
குளிர்பதனப் பெட்டியில்
கற்பனைக் குவியல்..

அழிக்கப்பட்டதோ..
அடக்கிவைக்கப்பட்டதோ..
அடைய வேண்டியதோ.. 
விருப்பங்கள் நிறைவேற்றம் 
கொள்ளும் நிலையில் 
இமைகள் பிரிந்த 
விழிகளில்
துயில் துறக்கப்பட்டு
துரத்தப் படுகிறது
சொப்பனச் சுவடுகள்..

இயல்புகள் 
தொலைக்கப்பட்ட நிலையில்
தொக்கி நிற்கிறது 
ஆங்கோர்
கனாக் காலம்...


                                                                                                                 

Tuesday, September 20, 2011

" தொலைக்கப்பட்ட தன்னியல்பு "





நியாயமா..
நியாயமாவென்று
கேள்விகளால் 
வேள்விகள் 
தொடக்கம் என்னுள்.. 

விடையறியும் 
ஆவல் நீள்கிறது.. 
ஆனால் 
எங்கோ சென்று
ஒளிந்துக் கொண்டு 
வேதனை தருகிறது... 

வேதனைகளை 
வெட்டிச் சாய்க்க 
புதிதாக சிரிக்கத் 
துவங்கி இருக்கிறது
மனம்.. 
இல்லை இல்லை
நடிக்கத் துவங்கி இருக்கிறது..
தன்னியல்பு நிலையை 
தொலைத்து விட்டு..

எங்கும் 
இருள் சூழ்ந்த நிலையில் 
வெளிச்சத்தின் 
கோடுகள் 
விரலிடுக்கில் 
நுழைவது போல் 
எங்கிருந்தோ வரும் 
மழைச் சாரலைக் கூட 
தொட்டுப் பார்க்க 
துணிவில்லை இப்போது...

உரசிச் செல்லும் 
தென்றலை தழுவும் 
தைரியமில்லை இப்போது.. 

காலை நேர 
பனித்துளியையும், 
மாலை நேர 
மஞ்சள் வானத்தையும் - அதன் 
நிர்மலமான நீல நிறத்தையும் 
ரசித்துப் பார்க்க 
மனமில்லை இப்போது...