Wednesday, May 11, 2011

" அழகான இம்சையடா நீ "


உன் நிழல் படத்தை
சற்று நேரம்
சும்மாதான் பார்த்தேன்
சட்டென 
பற்றிக் கொண்டதடா
ஏதோ ஒன்று...
__________________________

முதலில்
உன் எண்ணங்களை தான்
வாசிக்க தொடங்கினேன்
பின்புதான்
உன்னையே ஸ்வாசிக்க
ஆரம்பித்தேனோ...?
_______________________________


என்னை 
உன் கண்களில்
நனைத்து 
காதல்  செய்கிறாய்...
"சலவைக்காரன் போல 
நீ என்ன காதல் காரனா..?"
________________________________

எப்போதும் 
உன் அருகிலேயே 
என்னை இழுக்கிறாயே..
உன்னையே தொடர
வைக்கிறாயே...
இதுதான்
ஆண் ஈர்ப்பு விசையா...?
___________________________

உன் 
பார்வையால்
இமைக்கவும் மறுக்கின்றன
என் விழிகள்...
விழிகளில் பார்வை
மட்டும் தானே
சாத்தியம்..
உன் விழியில் ஈர்ப்பு விசை 
எப்படியடா...?
______________________________
உன்னை 
நினைக்கும் போதெல்லாம்
தனிமையில் 
சிரிக்கிறேன் நான்..
என்ன 
மந்திரம் செய்தாயடா...?
________________________________







நீ அருகில் இருக்கிறாய்
என்று பேசத் 
தொடங்கி விடுகிறேன்
தனியாக-
சில சமயம்...
என்னை அவ்வளவு
பைத்தியமாக்கி
வைத்திருக்கிறாயடா...
______________________________

உன் 
கைக்குட்டையில்
எப்படித்தான் 
மடித்து 
வைத்தாயோ...?
என் உயிரையும் 
சேர்த்து...
_______________________________
 
உன் பார்வை பட்டதால்
என் கவிதைகளும்
என்னைப் போலவே
உன்னையே
நேசிக்கத் தொடங்கிவிட்டதடா..
__________________________________
என் 
எண்ணக் கருவில்
உதித்த கவிதைகள்
அனைத்தும்
என்னை விட்டு...
காதல் விதைத்த
உன்னையே 
சுற்றுகிறதே...
இது என்னடா
நியாயம்....?!
____________________________
 

Tuesday, May 10, 2011

"பெய்யெனப் பெய்யும் மழை"

இது 
மழைக் காலம்
காதல் 
மழைக் காலம்..
இதில்
நீ
நான்
நம்மோடு 
நம்
  "மழை"


நீயும் நனைகிறாய்
நானும் நனைகிறேன்
நம்மோடு சிலிர்த்து
தானும் நனைகிறது
"மழை"

சாரலோ தூறலோ
தான் மட்டும் இன்றி
சுகமாய் சுமந்து வருகிறது
உன் நினைவுகளையும்
"மழை"


மழை பொழிந்த ஒரு நாளில்..
முழுதும் நனைந்து வந்த
என்னை
துவட்டி விட்டுக்கொண்டே
திட்டினாய்
"பைத்தியக்காரி" என்று..
நானும் கோபமாக 
"போடா காதல்காரா"
என்றேன்...
உடனே
முத்தத்தால் 
துவட்ட ஆரம்பித்தாய்
என்னை...

தேகம் தீண்டும் 
காற்றில் எல்லாம்
உன் வாசம் நுகர்கிறேன்..
சிலிர்த்து பெய்யும்
மழையில் 
நனையும் போதெல்லாம்
சந்தேகம் கொள்கிறேன்..
சில்லென்று என்
தேகம் தொடுவது
மழை துளியா..?
உன்
விரல் நுனியா..?

"அடைமழை"
விடாது பெய்கிறது
உன் காதல்...
நனைந்து நிற்கிறேன்
நான்..

Thursday, April 28, 2011

" அன்புள்ள தோழனுக்கு "




எந்தப் புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது
என்று கோலங்களை வரையறை செய்ய இயலாதோ... 
அது போல தான் நான் உன் மீது கொண்ட நட்பும்... 
எதிலிருந்து இணைந்தது என்று சொல்ல இயலாது...
நம் நட்பின் ஆரம்பத்தில் பெரிய மகத்துவம் ஏதும் இல்லை... 
ஆனால் அதன் பிறகான நாட்களில் ஒர் கவித்துவமும் கை 
கோர்த்து நடந்து கொண்டிருக்கிறது....

யாரென்று அறியாமல்..
பெயர் கூடத் தெரியாமல்..
முதலில் எங்கு தொடங்குவது..
பல கேள்விகளுக்கு இடையே
மெல்லியதாய் பூத்தது 
புன்னகை அரும்பு
நம் இதழ்களில்...
அது தான் விதையோ....????
இன்று வேரூன்றி 
விருட்சமாகி நிற்கிறது
நம் நட்பு...

எண்ணங்களில் அன்பினை 
அருதியிட்டு கூற இயலாது....
நான் கொண்ட நட்பும் அன்பும் என்றும் மாறாது..... 
இவ்வுலகில் வானும் மண்ணும் 
மாறும் காலம் என்றாகிலும் ஏற்படுமா...??
அது போல தான்
 நான் உன் மீது
 கொண்ட நட்பும்...?

ஒரு நாள் ....
என் பாதத்தின் பயணம் 
நிறைவடையலாம்...
என் விழிகளின் 
தேடுதல் அனைத்தும்
ஓய்வெடுத்துக் கொள்ளலாம்...
என் இதயத்தின் துடிப்பு
அடங்கவும் கூடும்....
என் இளமையின் 
வேகமும் தளர்ந்து போகும்....
ஏன் இந்த உலகமே கூட
அழிந்து போகும்....
ஆனால் ...
அப்போதும் என் ஸ்வாசமும்...
என் நட்பும்.... 
உன்னைத் தேடி மட்டுமே
அலைந்து கொண்டிருக்கும்....
மீண்டும் உன் நட்பை உயிர்பித்துக் கொள்ள....!!!

உள்ளங்கள் பிரிந்தாலும்..
என் உறவுகள் முறிந்தாலும்...
நினைவுகள் என்றும் பிரிவதில்லை..!!
நிகழ் காலம் மாறினாலும்..
வருங்காலத்தில் மலரும்
உன்னதமான் அன்பல்லவா நட்பு...!!
அது என் நெஞ்சில் நிற்கும் உயர்வான சொந்தமல்லவா...!!
என் உயிர் இருக்கும் வரையிலும் 
என் உடன் இருக்கும் சொந்தம் நீ....

தித்திக்கும் நட்பினில் திகட்டாமல் அன்பு செய்யத் தெரிந்தவள் நான்...
அன்பு என்னும் உணர்வு அஹிம்சா சக்தியின் உயிர்ப்பு....!!!

கடந்து வந்த வயதினில் 
கரைந்து போன நிமிடங்களின் 
நிகழ்வுகள் 
மனதின் நினைவினை விட்டு 
அகலாமல் பதிந்து விட்டது
என் நினைவு தேசத்தில்... 
நினைவு தேசத்தின் 
பாதச் சுவடுகளை அழிப்பது சுலபமல்ல..

ஏதோ ஒரு பறவையின் 
தொலைந்து போன
சிறகானது .....
காற்றோடு பேசிக்கொண்டே...
காற்றின் தீர்ந்து விடாத 
பக்கங்களில் எல்லாம் 
தன்னைப் பற்றி 
எழுதிச் செல்கிறதாம்....
அது போலவே...
வாழ்வும் 
நிகழ்ந்து முடிந்து விட்ட 
நிமிடங்களை..
அதன் முற்றுப் பெறா பக்கங்களில் 
எழுதிக் கொண்டு தான் இருக்கிறது...

உன்னில் கொண்ட நட்பும் 
பொறிக்கப்பட்ட கல் வெட்டாகத் தான்...
அழித்தல் என்பது நடவாத காரியம்...
சாம்பலிலும் உயிர்பிக்கும் 
பீனிக்ஸ் பறவையாக 
மீண்டும் மீண்டும் 
உயிர்பிக்கும்...
நம் நட்பு....
என் சாம்பலிலும்....!!!!




பல ஜென்மங்கள் 
கடந்த பின்னும்.. 
மீண்டும் மீண்டும்
வேண்டும் நட்பு இது..!!

பிறிதொரு நாளின் அமைதியான இரவினில் உன்னைப் பற்றி மேலும் பேச முற்படும் என் எண்ணங்கள்...
கவிதையின் வடிவினில்... 
அதற்கான முன்னோட்டம் தான் மேற்கண்ட வரிகள்...

என் நினைவேட்டின் பக்கங்கள் உன்னை பற்றி நிறைத்த வண்ணம் தான்..
என் எண்ணத்தில் நிறைந்திருக்கும் உன் வண்ணங்கள் மட்டுமே என் இதயத்தின் ரணங்களுக்கு மருந்தாகிறது....

வார்த்தைகளற்றதொரு வாக்கியத்தில் நிறைவு செய்கிறேன்.....


 காற்றும்
இசையாகும்..
அழகானதொரு 
வாசிப்பில்..
வார்த்தைகளும்
கவிதையாகும்
அழகானதொரு 
நேசிப்பில்...
உலகமும் 
என் வசமாகும்
உன் அழகான 
புன்சிரிப்பில்...!

கனா காலம்..

நீண்டு கொண்டே
செல்கிறது என் 

"கனா காலம்"

சின்ன சின்னதாய் 
கெஞ்சல்ஸ்..
சிறுக சிறுக 
கொஞ்சல்ஸ்..
அளவாய் கோபம்..
பார்வையில் மிரட்சி..
பேச்சில் மிரட்டல்...
வசீகரம்.. சிரிப்பு..
மொத்தத்தில் எது
எப்படியோ..?
உன் உணர்வின் மொழி
அனைத்தும் நீண்டு கொண்டே
செல்கிறது.. என்

  "கனா காலத்தில்"
நிதமும் செய்யும் 

ஒவ்வொரு செயலும்


உன்னையே நினைவு படுத்தி


முட்டி மோதி


சண்டையிட்டு


அழுது புலம்பி...


விழுந்து விட்ட முடிச்சுகளை


அவிழ்க்க முடியாது 


அமைதியாகும் மனம்..


மீண்டும் ஒரு வரம்


உன் சந்திப்பு..


நலம் விசாரிக்கிறாய்


அக்கறையோடு


சிறு மாற்றம் தான்..


முன்பெல்லாம்


அதிகாரம், கோபம், கண்டிப்பு,


அரவணைப்பு, காதல், குறை ஏக்க
ம்

எல்லாம் இருக்கும்.
.
இன்று கண்ணீர் தவிர


ஏதுமின்றி நட்பின் போர்வையில்


நினைவு மரத்து தொடர்கிறாய்


உன் விசாரிப்புகளை..!!




Wednesday, April 13, 2011

கைபேசியில் பதிவானது " காதல் "


கை பேசியில் 
பேசியதென்னவோ
நீதான் ...
ஆனால் 
பதிவானதென்னவோ
காதலாகி
போனது...


கை பேசி அழைப்பை
துண்டித்த மறு 
நொடியில்
மீண்டும் அழைப்பு
வருமோ..
என காத்திருக்க
தொடங்கிவிடுகிறது
மனது..

நீ அனுப்பும் குருஞ்செய்திகளோடு
சேர்த்தே அனுப்புகிறாய்
உன் பிரியங்களையும்..

சில நேர கைபேசி
சண்டைகளில்
விட்டுக் கொடுப்பது
நீயாகவே
இருந்திருக்கிறாய்..

அதன் சமாதான
வார்த்தைகளில்
தெரிக்கத் துவங்கிவிடுகிறது
உனதன்பு...

நீ அழைத்து
பேசிய நிமிடங்களையும்
நான் அழைக்காமல் 
விடுத்த நிமிடங்களையும்
பதிவு செய்தே வைத்திருக்கிறது
என் கைபேசி...

இப்போதெல்லாம்
நீ அழைத்து பேசும் 
நிமிடங்களுக்காய்
காத்திருக்கத் துவங்கி விட்டோம்
நானும் எனது 
கை பேசியும்...