Tuesday, June 21, 2016

உனக்கான கவிதைகள் இன்னமும் மிச்சமிருக்கின்றது.
மொழியின் லாகவத்தை
சொற்களில் திணித்து அடைத்து
இறுக முடிச்சிட்டு
பின்
வானம் நோக்கி விசுறுவேன்.
கருண்டு
திரண்டு
மேகமாகி நிற்கும் அவை
என்றேனும் உன்னை குறிவைத்துப் பெய்யும்.
அதை நேசம் என்பேன் நான்
மழை என்பாய் நீ.

- சௌம்யா.
உடைந்த உங்கள் நெஞ்சகத்திற்கு
அமைதியை கடத்தும் விதமாக
ஆதுரமாக இதழ் பதிக்கிறேன்.
அப்போது
முன்பைவிடவும்

அதிக வலியில் தவிக்கின்ற நீங்கள்
ஒட்டுமொத்த தவிப்பையும்
எனக்குள் கடத்திடவிட முனைந்த கணத்தில்
மலரைப்போல ,உதிரத்துவங்கிய காலம்
முழுவதுமாக எனை கொன்றுவிட்டிருந்தது.



Friday, September 20, 2013

காற்று துளையிடும் இலை.






வெய்யில் உலரத் துவங்கிய பொழுதில்
வானம் தன்னை முழுமையாக 
வெறுமையிடம் ஒப்படைத்திருந்தது.
அதன் விரலொன்று 
வெகு லாகவமாக காலத்தை கிழித்துக் கொண்டிருக்க
உன்னை நிறைத்து 
தளும்பிக் கொண்டிருக்கும் மேகத்திற்குள்ளிருந்து 
சடசடத்துப் பெய்கிறாய்
வழிந்தோடும் உன்னை எடுத்து வாசம் கொள்ளும் காற்றின்
திசையெங்கிலும் விரவத்தொடங்குகிறாய்.
இப்போது
இருளடர்ந்த மரத்தினை சம்பவிக்கும் காற்று இலையொன்றைத் துளையிட்டுக் கொண்டிருக்கிறது.. 

- சௌம்யா...

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 2



நாமிருவம்
ஒரு குடைக்குள் பயணித்தோம்

நனைந்துக் கொண்டிருந்தது
ஓராயிரம்
மழைத் துளி..


உன்னையும் என்னையும்

சுற்றி வளைத்து
வானவில்லானது
மழை..


நீயில்லாதொரு

பயணத்தில்
வழிப்போக்கனாய்
உடன் வந்தது
மழை..

Friday, September 13, 2013

மழையானவள்.. உன் மனதாள்பவள்.. 1






மனம் நனையச் செய்வதில்
ஒன்றுதான் 
நீயும் 
மழையும்..




நினக்கும் போதெல்லாம்

வருவதே இல்லை
நீயும் 
மழையும்...




பருவ மழை தப்பிப் போனதாம்

உன் வருகையைப் போலவே...





அடைமழைக்கு பிறகான

அமைதி
உன் வருகைக்கு பிறகான
என் கோபம்..


Monday, August 5, 2013

அடர் வனமொன்றில் நான்...




மரங்களடர்ந்த வனமொன்றில் 
தணித்து விடப்படுகிறோம்
நானும் எனது கவிதையும்..

என்னை உள்வாங்கிக் கொண்ட 
அவ்விடத்தினை சுற்றிலும்
தேடுதலோடு பாயும் 
என் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டிருக்கிறேன்

கவிதையை தணித்து விட்டபடி
அவ்வடர் வனத்தின் ஒற்றையடிப்பாதையில் 
பயணிக்கத் துவங்குகிறேன்

பச்சிளம் குழந்தையின் பாதங்களை ஒத்திருந்தது
அவ்ஒற்றை புள் வழித் தடம்.
மனம் நெகிழ்ந்த அவ்வினாடியில்
என் கால்களும் தளிர் நடை பயிலத் துவங்கின

சிற்றாற்றங்கரையிலிருந்து வேர் விட்டு 
விழுது பரப்பிய விருட்சமொன்றில் 
காற்றடிக்கும் போதெல்லாம் உதிரும் கணிகளை 
வாயிலேந்திக் கொண்டன இரு அணில்கள்
அதன் ரசனையை ருசிக்கத் துவங்கினேன்..

இளம் பெண்ணொருத்தியின் 
நகை ஒலியை ஒத்தாற் போல்
விழுந்து கொண்டிருந்த அருவியொன்று 
அருகிருந்த பாறையில் தன் சுவடுகளை
பதித்துக் கொண்டிருந்த அவ்வேளையில் தான் 
என் சுயமிழந்து பாயும் மீனாகினேன்..

வெளிர் வானம் இருள் போர்த்திய நிலையில்
இடி மின்னலென நாடக ஒத்திகை ஒன்றை 
மேகங்கள் நடத்திக் கொண்டிருக்க 
வர்ணமிழைக்கும் வானவில்லொன்று
பூமியை வெறித்துக் கொண்டிருந்த வேளையில்
இலையுதிர்க்கும் மரங்களெல்லாம்
மழையுதிர்க்கத் துவங்கின..

இப்போது
அக்கர்வம் மிக்க கவிதையின் 
நுணியொன்றை 
பற்றத் தொடங்கியிருக்கிறேன் நான்..


- நட்புடன் சௌம்யா..

Wednesday, June 19, 2013

மழையுதிர்காலம்...






வெளிர் வானம் இருள் போர்த்திய நிலையில்
இடி மின்னலென நாடக ஒத்திகை ஒன்றை 
மேகங்கள் நடத்திக் கொண்டிருக்க 
வர்ணமிழைக்கும் வானவில்லொன்று
பூமியை வெறித்துக் கொண்டிருந்த வேளையில்
இலையுதிர்க்கும் மரங்களெல்லாம்
மழையுதிர்க்கத் துவங்கின..