Sunday, October 14, 2012

தேவதை கானம்...




தனக்கே
உரித்தான ஒலியில்
ஓரழகிய பாடலோடு
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
அக் கைபேசி..

அப்பாடலின்
ஒற்றை நுனியை
பற்றியவாரே
அதன் பல்லவியின்
குறுக்கிலும்
நெடுக்கிலும்
மிதக்கத் தொடங்கினேன்

அதன் சரணத்தில்
என்னுயிர் கரைந்து
சட்டென்றொரு
பறவையாகி
வானில் பறக்கிறேன்

நிலவினருகில்
இளைப்பாருகிறேன்

நட்சத்திரங்களில்
உல்லாசமாய்
ஊஞ்சலாடுகிறேன்..

அப்பாடலின்
கடைசி ஆலாபனையில்
அருகிருந்த
மேகத்திற்குள்
தவறி விழுந்தேன்

அதில்
ஒளிந்திருந்த
மழை
பூக்களை
தூவியது..

அப்பாடலின்
முடிவில்
நானொரு
தேவதையாகித்
திரும்பினேன்
என்னிடத்திற்கு..

இப்போது
எனதிறகுகள்
அதன்
வரிகளை
எழுதத் தொடங்கின
எனக்குள்..



Friday, October 12, 2012

மரணாவஸ்தை கொண்ட ஆகப் பெருந்துயரென்பது...







யாரென்றறியாத அவ்விருவரும்
எவர் போலவுமில்லை..
யாரிருக்க முடியும் அவர்களைப் போல..?
தெய்வாம்சப் பெண் அவள்
அவனோ ஷத்ரிய வம்சத்தவன்
அவனைப் பார்க்கும்போதெல்லாம்
உள்ளங்கையாள் வதனத்தை மூடுகிறாளெனில்
அது வெட்கமல்ல; பெருந்துயரொன்றின் கேவல்
அவளைவிட அதிதுயரம் சுமக்கிறான் அவன்.
காலம் தம் இதயத்தின்
வலதறையில் அவளை
இடதறையில் அவனை
நிரப்பிக்கொண்டு காளிங்க நர்த்தனம் ஆடுகிறது.
காலத்தைக் குற்றம் சொல்லும் பாவம்
அவர்களுக்குள்ளும் இருக்கிறது.
காலம் குற்றம் செய்ததாகினும்
தவறொன்றும் இழைக்காததாகினும்
ஏதொன்றையோ செய்து
இருவரையும் தண்டனைக்குப் பணித்து
நேசச் சிலுவை சுமக்கச் செய்திருக்கிறது.
பிறிதொரு பிறவியின் வரவேற்பறையில்
காத்துக் கொண்டிருக்கலாம் இந்நேசம்
ஒருவேளை கதறிக்கொண்டுமிருக்கலாம்..