மரங்களடர்ந்த வனமொன்றில்
தணித்து விடப்படுகிறோம்
நானும் எனது கவிதையும்..
என்னை உள்வாங்கிக் கொண்ட
அவ்விடத்தினை சுற்றிலும்
தேடுதலோடு பாயும்
என் எண்ணங்களுக்கு கடிவாளமிட்டிருக்கிறேன்
கவிதையை தணித்து விட்டபடி
அவ்வடர் வனத்தின் ஒற்றையடிப்பாதையில்
பயணிக்கத் துவங்குகிறேன்
பச்சிளம் குழந்தையின் பாதங்களை ஒத்திருந்தது
அவ்ஒற்றை புள் வழித் தடம்.
மனம் நெகிழ்ந்த அவ்வினாடியில்
என் கால்களும் தளிர் நடை பயிலத் துவங்கின
சிற்றாற்றங்கரையிலிருந்து வேர் விட்டு
விழுது பரப்பிய விருட்சமொன்றில்
காற்றடிக்கும் போதெல்லாம் உதிரும் கணிகளை
வாயிலேந்திக் கொண்டன இரு அணில்கள்
அதன் ரசனையை ருசிக்கத் துவங்கினேன்..
இளம் பெண்ணொருத்தியின்
நகை ஒலியை ஒத்தாற் போல்
விழுந்து கொண்டிருந்த அருவியொன்று
அருகிருந்த பாறையில் தன் சுவடுகளை
பதித்துக் கொண்டிருந்த அவ்வேளையில் தான்
என் சுயமிழந்து பாயும் மீனாகினேன்..
வெளிர் வானம் இருள் போர்த்திய நிலையில்
இடி மின்னலென நாடக ஒத்திகை ஒன்றை
மேகங்கள் நடத்திக் கொண்டிருக்க
வர்ணமிழைக்கும் வானவில்லொன்று
பூமியை வெறித்துக் கொண்டிருந்த வேளையில்
இலையுதிர்க்கும் மரங்களெல்லாம்
மழையுதிர்க்கத் துவங்கின..
இப்போது
அக்கர்வம் மிக்க கவிதையின்
நுணியொன்றை
பற்றத் தொடங்கியிருக்கிறேன் நான்..
- நட்புடன் சௌம்யா..