யாரென்றறியாத அவ்விருவரும்
எவர் போலவுமில்லை..
யாரிருக்க முடியும் அவர்களைப் போல..?
தெய்வாம்சப் பெண் அவள்
அவனோ ஷத்ரிய வம்சத்தவன்
அவனைப் பார்க்கும்போதெல்லாம்
உள்ளங்கையாள் வதனத்தை மூடுகிறாளெனில்
அது வெட்கமல்ல; பெருந்துயரொன்றின் கேவல்
அவளைவிட அதிதுயரம் சுமக்கிறான் அவன்.
காலம் தம் இதயத்தின்
வலதறையில் அவளை
இடதறையில் அவனை
நிரப்பிக்கொண்டு காளிங்க நர்த்தனம் ஆடுகிறது.
காலத்தைக் குற்றம் சொல்லும் பாவம்
அவர்களுக்குள்ளும் இருக்கிறது.
காலம் குற்றம் செய்ததாகினும்
தவறொன்றும் இழைக்காததாகினும்
ஏதொன்றையோ செய்து
இருவரையும் தண்டனைக்குப் பணித்து
நேசச் சிலுவை சுமக்கச் செய்திருக்கிறது.
பிறிதொரு பிறவியின் வரவேற்பறையில்
காத்துக் கொண்டிருக்கலாம் இந்நேசம்
ஒருவேளை கதறிக்கொண்டுமிருக்கலாம்..
2 comments:
வித்தியாசமான சிந்தனை வரிகள்...
நன்றி சார்..
Post a Comment